நேர்மையாளர் உயர்திரு.உ.சகாயம் இ.ஆ.ப ( வி.ஓ ) அவர்களின் சீரிய சிந்தனையில் உதயமாகி , தமிழ்ப்பணி
புரிவதற்காக 19.09.2019 அன்று முதல் தமிழ் முற்றம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக
ஆங்கிலம் கலவாத எளிய, இயல்பு தமிழ் உரை நிகழ்த்தும் இந் நிகழ்வானது தொடர்ந்து வெற்றிகரமாக 100-வது
வார நிகழ்வை நோக்கி வீரியத்துடன் நடந்து கொண்டிருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியை அனைத்து தளங்களிலும்
வளர்த்து , வருங்கால தமிழ் தலைமுறையினரின் நெஞ்சில் தமிழ்க் கனலை சுடரவிட்டு எரியச் செய்யும்
நெடுங்கனவை நோக்கமாக கொண்டு தமிழ் முற்றம் பயணிக்கிறது.
இலக்கு:
-
தமிழ்மொழியின் பயன்பாட்டினை தமிழர்களின் வாழ்வியல் தளங்கள் அனைத்திலும் உறுதிப்படுத்தவும், அதிகரித்திடவும், அதனை ஒட்டிய தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
-
தமிழ் மண், மரபு, பண்பாடு, மொழி இன்னும் பிற கூறுகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
-
தமிழர்தம் அன்றாட உரையாடல்களில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிக் கலப்பின்றி எளிய தமிழ் பேசுவதை உறுதி செய்தல்.
-
தமிழகத்தை தாண்டி உலகெங்கும் வாழும் தமிழர்களின் அகவாழ்வுத் தளங்களிலும், இயன்றவரை புறச்சூழல்களிலும் தமிழ்மொழியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல், மற்றும் உறுதி செய்தல்.
-
தமிழர்தம் அறிந்த மற்றும் அறியப்படாத பெருமைமிகு தொன்மையையும், வரலாற்றையும் ஆய்வு செய்து, வெளிக் கொணர்ந்து, அவற்றை தமிழர்களிடத்தில் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடத்திலும் எடுத்துச் செல்லுதல்.
-
தமிழ் பேரறிஞர்கள் எழுதிய தமிழ்மொழிப்பற்றிய ஆய்வு நூல்களையும், இன்னும் பிற நூல்களையும் பதிப்பித்து அவர்களை உரிய வகையில் ஊக்கப்படுத்துதல். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு இவ்வரிய தமிழ் நூல்கள் கிடைத்திட வழிவகை செய்தல்.